ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 86 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 378 பேர் கைது
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை போலீசார் நடத்திய சோதனையில் 86 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான, 361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 378 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைமை இயக்குநர் சீமா மற்றும் காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் ஆகியோர் உத்தரவுப்படி, கோவை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி, ஈரோடு சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் ஆகியோரது மேற்பார்வையில் ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க காவல் ஆய்வாளர் சுதா தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினார், மேனகா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை மட்டும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 378 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 86 ஆயிரத்து 606 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 105 இருசக்கர வாகனங்கள், 34 நான்கு சக்கர வாகனங்கள் என 139 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடத்தல் வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து 51 லட்சத்து 41 ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் 129 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu