ஈரோடு மாவட்டத்தில், மலைக்கிராம அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வசதி

கோப்பு படம்.
Smart Class in School-ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய மூன்று ஒன்றிய பகுதிகள், மலைக்கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு உள்ள மலைக்கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இம்மலைக்கிராமங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி மீது போதுமான விழிப்புணர்வு இல்லாததால், பள்ளி இடைநிற்றல் என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது.மாணவ, மாணவியர் மத்தியில் நாளுக்கு நாள் கற்றல் ஆர்வம் குறைகிறது. குறிப்பாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் மூடப்பட்டு விட்டதால், பெரும்பாலானோர் மீண்டும் குழந்தை தொழிலாளர்களாக மாறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க, இதை தடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
இந்நிலையில், மலைக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மலைக்கிராமங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்தியூர், சத்தி, தாளவாடி ஆகிய 3 ஒன்றியங்களில் 100 அரசு பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன், இந்தாண்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரி கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 3 ஒன்றியங்கள் மலைப்பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த 3 ஒன்றியங்களில் 14 ஊராட்சிகள் மலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதில் 226 குக்கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மாணவர்களிடையே கல்வி மீதான ஆர்வத்தை உருவாக்கும் வகையில், 'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் கல்வி கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக அரசு மற்றும் நலத்துறை பள்ளிகள் என 100 பள்ளிகளில் ரூ.2 கோடி செலவில் 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்பட்டுள்ளது. தரமான கல்வியை அனைவருக்கும் வழங்கும் வகையில், தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒளிரும் ஈரோடு அமைப்பு மற்றும் பெடரல் வங்கி ஆகியோருடன் இணைந்து அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
இதற்காக மலைக்கிராமங்களில் இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்பட்டுள்ளதையடுத்து ஆசியர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகளுக்கு மாணவர்களிடையே வரவேற்பும், ஆர்வமும் உள்ளதால், மலைப்பகுதி மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் என்பது வெகுவாக குறைந்துவிடும் என்று கருதுகின்றோம். வழக்கமான கல்வி முறையில் இருந்து மாறுபட்டு புதுமையை புகுத்தும் பொழுது மாணவர்கள் எளிதாக கற்றுக்கொள்வதோடு, கல்வி மீதான ஆர்வமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu