எடை குறைவான இரட்டையர்களுக்கு மூச்சுத்திணறல்: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சையால் நலம்
இரட்டை பெண் குழந்தைகளுடன் கோமதி
குறைந்த எடையுடன் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் கோளாறு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சையால் நலமடைந்து வீடு திரும்பினர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இரும்பு பாலம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மனைவி கோமதி. கர்ப்பிணியான கோமதி கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு 27 வாரங்களே ஆன குறைமாதத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இதில் முதல் குழந்தை 940 கிராமும், 2-வது குழந்தை 680 கிராமும் இருந்தது. குழந்தைகள் மிகவும் குறைந்த எடையில் பிறந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
எனவே குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தாமோதரன், கோமதி ஆகியோரின் விருப்பத்தின் பேரில் 2 குழந்தைகளும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் இருந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு செப்டம்பர் மாதம் 4ம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து 2 குழந்தைகளுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். குறைந்த எடையுடன் இருப்பதால், 2 குழந்தைகளுக்கும் தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு குழந்தைகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. உடல் எடையும் அதிகரித்தது. முதல் குழந்தை 1.7 கிலோவும், 2-வது குழந்தை 1.05 கிலோவும் உள்ளது. இதையடுத்து 2 குழந்தைகளையும் தாயுடன் நேற்று முன்தினம் டாக்டர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
எடை குறைவாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினரை அதிகாரிகள் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu