Exclusive: கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பல லட்சம் முறைகேடு; அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு.!
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பல லட்சம் முறைகேடு என குற்றச்சாட்டு.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 28-வது வார்டில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. மாவட்டத்தில் மளிகை பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும் இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் மளிகை பொருட்கள் காய்கறிகள் மற்றும் ஜவுளி போன்ற அனைத்து பொருட்களுக்கும் வியாபாரிகள் சுங்க கட்டணம் செலுத்தியே உள்ளே நுழைய முடியும்.இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலத்தில் கலந்து கொள்ள எவரும் முன்வராத காரணத்தினால், கோபி நகராட்சி நேரடியாக அதிகாரிகள் மூலம் சுங்க கட்டணத்தை வசூல் செய்து வந்தது .
சனிக்கிழமை தோறும் நடைபெறும் வாரசந்தையின் மூலம் சுங்க கட்டணமாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலாவதாகவும், ஆனால் இந்த தொகையை வசூலிக்கும் அதிகாரிகள் நகராட்சிக்கு குறைவான தொகையை செலுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக கோபி நகர்மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் மன்ற உறுப்பினர் குமாரசீனிவாஸ் கேள்வி எழுப்பினார்.
ஆனால் மன்ற உறுப்பினர் குமார சீனிவாசன் நகராட்சி அதிகாரிகளின் முறைகேடு குறித்து எழுப்பிய கேள்விக்கு நகராட்சி ஆணையர் உரிய பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், இதேபோல் கோபி நகராட்சி பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடம் மற்றும் பேருந்து நுழைவு கட்டணம் வசூலிப்பதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகவும் நகர்மன்ற உறுப்பினர் குமாரசீனிவாஸ் நகர்மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
மேலும், நகராட்சியின் மூலம் நேரடியாக வசூலாகும் பல லட்சம் வசூல் தொகையை அதிகாரிகள் முறைகேடாக கணக்கு காண்பித்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதை முறையான விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென குமாரசீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu