கோபி அருகே நடந்த போட்டியில் ரேக்ளா வண்டி மோதி திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் காயம்
கள்ளிப்பட்டி கலைஞர் சிலை அருகில் ரேக்ளா பந்தய வண்டி திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் மீது மோதியதில் அவர் காயமடைந்தார்.
கோபி அருகே கள்ளிப்பட்டியில் நடந்த போட்டியில் ரேக்ளா வண்டி மோதியதில், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் காயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி கலைஞர் சிலை அருகில் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட செயலாளர் நல்லசிவம் கொடியசைத்து தொடங்கி வைத்ததும், போட்டியில் கலந்து கொண்ட ரேக்ளா வண்டிகள் சீறி பாய்ந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக போட்டியில் கலந்து கொண்ட ஒரு ரேக்ளா வண்டி சாலையோரம் நின்று கொண்டு இருந்த திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிந்து ரவிச்சந்திரன் காயமடைந்து மயங்கி விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த ஆண்டும் இதே இடத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்ற போதும் குதிரைகள் மிரண்டு பார்வையாளர்கள் மீது மோதியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த ஆண்டும் அதே போல் விபத்து நடந்துள்ளது.
ரேக்ளா போட்டி நடத்துவதற்கான அகலமான சாலை வசதியில்லாத இடத்தில் இது போன்ற போட்டிகளை நடத்துவது விபத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் செல்லும் சாலையில் குதிரைகளை போட்டிக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu