புதிய கல்விக் கொள்கை ஆய்வறிக்கை ஜனவரியில் தாக்கல் : ஈரோட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி..!
கலைத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கினார்.
ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரி கலையரங்கில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது.
பயிற்சியை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்து, புதிய பாராத எழுத்தறிவு கையேட்டை இருவரும் வெளியிட்டனர்.
மேலும், ஈரோடு மாவட்ட அளவிலான கலைத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாச்சலம், சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்து உள்ளது. தற்போது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள் அந்தப் பணிகள் முடிவடையும், ஜனவரி மாதத்தில் முதல்வரிடம் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு முதல்வர் அதை ஆய்வு செய்து ஆணை வெளியிடுவார்.
நடப்பாண்டு தமிழகம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில், ஈரோடு மாவட்டத்தின் இலக்கு 23,598. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு திட்டம் பயன் தந்தது. இலக்கை விஞ்சி 5 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் பயன் அடைவார்கள்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் 24 வகையான விளையாட்டுகளில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளன. புதிதாக பொறுப்பேற்றுள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்றுவதாக அறிவித்து உள்ளார். அந்தத் துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
பள்ளிகளில் குழந்தைகள் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று முதல்வர் ஏற்கெனவே கவலை தெரிவித்து உள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கூட போதை பொருள் இல்லா மாநிலத்தை உருவாக்குவதை அவர் வலியுறுத்தி உள்ளார். எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu