ஆப்பக்கூடல் அருகே மயான வசதி கோரி சடலத்துடன் சாலை மறியல் போராட்டம்

ஆப்பக்கூடல் அருகே மயான வசதி கோரி சடலத்துடன் சாலை மறியல் போராட்டம்
X

ஆப்பக்கூடல் - பவானி சாலையில் ஒரிச்சேரிப்புதூரில் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே இறந்தவரின் உடலை புதைப்பதற்கு மயானம் வசதி கோரி சடலத்துடன் உறவினர்கள் 4 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்பக்கூடல் அருகே இறந்தவரின் உடலை புதைப்பதற்கு அரசு ஒதுக்கிய இடத்தில் மயானம் வசதி கோரி சடலத்துடன் உறவினர்கள் 4 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூர், காமராஜர் நகர் பகுதியில் 200க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக மயான வசதி இல்லாமல் பவானி ஆற்றங்கரையில் கடந்த பல வருடங்களாக இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதுமாக, எரியூட்டுவதுமாக இருந்து வந்தனர்.

இதையடுத்து, மயான வசதி வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததின் காரணமாக ஆதித்திராவிடர் நலத்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் 10 ஹெக்டேர் பரப்பளவில் மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் அப்பகுதியில் மயானம் வருவதற்கு அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிலத்தை அளவிடும் பணியை வருவாய்த் துறையினர் கைவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த கருப்பாயி (வயது 60) என்பவர் நேற்று (நவ.15) இறந்து விட்டார். தொடர்ந்து, இன்று (நவ.16) அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கேட்டு அவரது உடலை பவானி - சத்தியமங்கலம் சாலையில் வைத்து உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் பவானி வட்டாட்சியர் சித்ரா தலைமையிலான வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு உடன்படாத கிராம மக்கள் அரசு ஒதுக்கிய இடத்தில் மயானம் ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சாரல் மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கருப்பாயின் உடலுடன் மழையில் நடந்த படியே தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மயானம் செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லாததன் காரணமாக பாதை வசதியை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு மயானம் ஏற்படுத்தித் தருகிறோம் என வருவாய்த் துறையினர் ஊர் பொதுமக்களுக்கு உறுதி அளித்தனர். இதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு சடலத்தை கொண்டு சென்று பவானி ஆற்றங்கரையோரம் அடக்கம் செய்தனர்.

இறந்தவரின் உடலுடன் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சாலை மறியலின் போது வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏதும் ஏற்படவில்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!