அந்தியூர் அருகே கல் குவாரியில் வருவாய்த்துறையினர் ஆய்வு
கல் குவாரியை ஆய்வு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள குருவரெட்டியூர் , சென்ம்பட்டி பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இதில் சில கல்குவாரிகள் அரசு விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆழமாகத் தோண்டி பாறைகளை வெட்டி எடுத்து ஜல்லி கற்கள், எம் சாண்ட், பிசான்ட் என பல வகைகளில் விற்று வருகின்றனர்.
இந்த கல் குவாரிகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு கடந்த மார்ச் மாதம் குருவரெட்டியூர் பகுதி மக்கள் கொடுத்த பல்வேறு புகார் தெரிவித்திருந்தனர். இதில் அப்பகுதி மக்கள் புறம்போக்கு நிலத்திற்கு அருகாமையில் கல்குவாரிகள் அமைத்து கொண்டு அரசுக்குச் சொந்தமான இடங்களில் 200அடி ஆழத்துக்கும் மேற்பட்டு, அதிகமாக கற்களை முறைகேடாய் வெட்டி எடுத்திருப்பதாகவும், கல் குவாரிகளில் பாறைகள் வெட்டி எடுப்பதற்கு அரசு அனுமதிக்காத காலத்தில் விதிமுறைகளை மீறி வெட்டி எடுப்பதாகவும், பட்டா நிலங்களில் அனுமதி வாங்கிக்கொண்டு புறம்போக்கு நிலங்களில் கற்களை வெடிவைத்து தகர்த்து எடுப்பதாகவும், இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் பெரிதும் பாதிப்படைவதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னியிடம் அளித்த புகாரில் தெரிவித்திருந்தனர்.
இதன் பேரில் நேற்று கோபி கோட்டாட்சியர் பழனிமாதேவி, அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் நில அளவையாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் குருவரெட்டியூர் பகுதியிலுள்ள (கேஎஸ்) கல்குவாரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அரசு அனுமதித்த அளவுகளைக் காட்டிலும் அதிக அளவு பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டதும், அரசு தடை விதித்திருந்த காலங்களில் கல்குவாரிகள் இயங்கியதும் தெரியவந்தது.மேலும் அருகிலுள்ள தனியாரின் பட்டா நிலங்களில், ஜல்லி கிரஷரிலிருந்து ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டிருந்தது உள்பட முறைகேடுகளை வருவாய்த்துறையினர் உறுதி செய்தனர்.
மேலும் கல் குவாரிகளில் கனிம வளத் துறையினர் எவ்வளவு அடி ஆழத்திற்கு பாறைகளை வெட்டி எடுக்க வேண்டும் என வருவாய்த் துறையினருக்கு முறையாக தெரிவிக்கபடாததால் அங்கு 200 அடி ஆழத்திற்கு மேல் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் குறித்து அளவீடு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரருக்கு முறையான ஆய்வு அறிக்கையும், விதிமீறல்களால் அரசின் வருவாய் இழப்பு குறித்தும் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என கோபி கோட்டாட்சியர் மற்றும் அந்தியூர் வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu