பவானி அருகே மனைவி இறந்த சோகத்தில் ஆற்றில் குதித்தவர் மீட்பு
கோபால்.
ஈரோடு மாவட்டம் பவானி புதிய பஸ்நிலையம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையும் இணைக்கும் வகையில் உள்ள இந்த பாலத்தில் நேற்று இரவு ஒருவர் திடீரென தடுப்புச்சுவர் மீது ஏறி ஆற்றில் குதித்துள்ளார். இதைக்கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் ஆற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றின் நடுவே தண்ணீருக்குள் காயமடைந்த நிலையில் கிடந்தவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சித்தோடு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் கோபால் (வயது 55) என்பது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சேர்ந்த கோபால், மனைவி தனலட்சுமி உடல்நலகுறைவு காரணமாக சிகிச்சைக்காக, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சித்தோடு வந்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் தனலட்சுமி கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் மனவேதனையில் தவித்து வந்த கோபால் நேற்று இரவு காவிரி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். முதுகில் பலத்த காயமடைந்த கோபாலுக்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu