ஈரோடு மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 138 ஆடுகளின் 34 உரிமையாளர்களுக்கு ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது: ஆட்சியர் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில், தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 138 ஆடுகளின் 34 உரிமையாளர்களுக்கு ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் விவசாய மற்றும் கால்நடை விவசாயிகளின் கால்நடைகளான மாட்டினம், வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, பூனை மற்றும் இதர கால்நடைகளை தெருநாய்கள் தாக்கி உயிரிழந்தமைக்கு ஈடு செய்யும் வகையில் கால்நடைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் வரையரைகள் வரையப்பட்டுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு பசு, எருமை ஒன்றிற்கு தலா ரூ.37 ஆயிரத்து 500ம், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு ஒன்றிற்கு தலா ரூ.6 ஆயிரமும், கோழி ஒன்றிற்கு தலா ரூ.200ம் சிறப்பு நிகழ்வாக கருதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2025 ஜனவரி மாதம் 25ம் தேதி வரை இறந்த 138 ஆடுகளின் உரிமையாளர்கள் 34 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மார்ச் 2025 வரை இறந்த ஆடுகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு, இழப்பீட்டு தொகை வழங்க முன்மொழிவு அரசுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 55 ஆடுகளின் உரிமையாளர்களான 5 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 21) வழங்கினார். மேலும், 83 ஆடுகளின் உரிமையாளர்களான 29 நபர்களுக்கு ரூ.4.98 லட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார். தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu