ஈரோட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் அடங்கிய மினி லாரி கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்ட போது எடுத்த படம்.
பெங்கல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.4.34 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மினி லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
பெங்கல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மினி லாரி வாகனத்தினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரலத்துல்லா நேற்று (டிச.5) கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இதில் 1,460 பிரட் பாக்கெட்கள், 3,990 குடிநீர் பாட்டில்கள், 2,420 பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் 3,600 எண்ணிக்கையில் அரிசி, பருப்பு, கோதுமை மாவு, ரவை, எண்ணெய், உப்பு உட்பட 11,470 எண்ணிக்கையில் ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறப்படும் நிவாரண பொருட்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu