அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து வரட்டுப்பள்ளம் அணையின் மதகை திருகி தண்ணீர் திறந்து விட்ட போது எடுத்த படம்.
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதி அடிவாரத்தில், வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.46 அடியும், மொத்த கொள்ளளவு 139.60 மி.கன அடியும் ஆகும்.
இந்நிலையில், அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு ஜன.6ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டது. அதன்படி, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி இன்று (ஜன.6) திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி தலைமையில், உதவி பொறியாளர் கிருபாகரன் முன்னிலையில் பாசன விவசாய சங்கத்தினர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டனர். அப்போது, மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீர் மீது பூக்களை தூவி வரவேற்றனர்.
பின்னர், இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் பழைய ஆயக்கட்டு பகுதி ஏரிகளான பிரம்மதேசம் ஏரி 127 ஏக்கர், வேம்பத்தி ஏரி 189 ஏக்கர், ஆப்பக்கூடல் ஏரி 57 ஏக்கர், அந்தியூர் ஏரி 436 ஏக்கர் என மொத்தம் 809 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஜன.6ம் தேதி (இன்று) முதல் 8ம் தேதி வரை 3 நாட்கள் பிரம்மதேசம் ஏரிக்கு வினாடிக்கு 16 கன அடியும், ஜன.9ம் தேதி முதல் 11ம் தேதி வரை 3 நாட்கள்- வேம்பத்தி ஏரிக்கு 25 கன அடியும், ஜன.12ம் தேதி முதல் 13ம் தேதி வரை 2 நாட்கள் ஆப்பக்கூடல் ஏரிக்கு 11 கன அடியும், ஜன.14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் அந்தியூர் ஏரிக்கு 32 கன அடியும் என மொத்தம் 23.586 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu