இம்மாத இறுதிக்குள் 2.8 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். அருகில் (இடது) ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.
2.8 லட்சம் ரேஷன் கார்டுகள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என ஈரோட்டில் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், வித்யா நகர், திண்டல் கிளையில் மஞ்சள் அறவை செய்யும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடந்த சில வாரமாக டெல்டா மாவட்டங்களிலும், கடலூர் போன்ற பகுதியிலும், தற்போது மேற்கு மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வருகிறேன். இன்று (8ம் தேதி) ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், கூட்டுறவு துறையின் உற்பத்தி பொருளான மங்களம் மசாலா பொருட்கள், குடோன்கள் ஏல முறைகளை ஆய்வு செய்தேன்.
இங்கு மஞ்சளை, 3 வகையாக பிரிக்கும், ரூ.1 கோடி மதிப்பிலான இயந்திர செயல்பாட்டை பார்த்தேன். கூட்டுறவு துறை மூலம், உணவு பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, மாநில அளவில் பொருட்கள் வாங்கும், 1.14 கோடி ரேஷன் கார்டுகள் பயன் பெறுகிறது. இதற்கு தேவையான அரிசியை கொள்முதல் செய்யும் பணியும் உள்ளது.
தற்போது அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை அடுத்து சம்பா சாகுபடி பணிகள் நடக்கும். அறுவடையின் போது நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, நெல்லை கொள்முதல் செய்து, அறவை செய்து தயார்படுத்த வேண்டும். தமிழகத்தில் தற்போது, 2.24 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. தேர்தல் நேரத்தில், 3.01 லட்சம் பேர் புதிய கார்டுக்கு விண்ணப்பித்து தற்போது அவை சரி பார்த்து, 2.8 லட்சம் கார்டு தயார் நிலையில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்.
கூட்டுறவு கடன் இந்தாண்டு, 26 முதல் 30 வகையான கடன் வழங்கப்படுகிறது. விவசாய கடன், கறவை மாடு கடன், மகளிர் குழு கடன் அனைவருக்கும் தெரியும். ஆனால் தெரியாத பல கடன்கள் உள்ளன. அதற்கான இலக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் காலாண்டில், 2.78 லட்சம் பேருக்கு, 26,888 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
விவசாய கடன், 16,500 கோடி ரூபாய், கால்நடைக்கு, 2,500 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாய கடனில் இதுவரை, 3.46 லட்சம் பேருக்கு, 3,081 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் வேளாண் கடன் இலக்கு, 1,140 கோடி ரூபாயாகும். அதில், 171 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வருமாண்டில் அதிகமாக கடன் வழங்கப்படும். ஏற்கனவே கடன் பெற்ற விவசாயிகளுடன், புதிய விவசாயிகள், பிற நபர்களுக்கு கடன் வழங்க வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தில்தான் மிக அதிகமாக, 380 குடோன்கள் உள்ளன. 20.44 லட்சம் டன் சேமிக்கும் வசதிகள் உள்ளன. தேவையான அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளன. ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்து வருகிறோம். தேர்தல் நேரத்தில் பருப்பு, பாமாயில் வரத்தில் தாமதமானது. தற்போது விரைவாக பெறப்பட்டு, விரைவாக வழங்கி வருகிறோம்.
தேவைக்கு முன்கூட்டியே பொருட்களை வாங்க, அரசு ஆர்டர் வழங்கி உள்ளது. மாத தேவைக்கு, 20,000 டன் துவரம் பருப்பும், 2.36 கோடி பவுச் பாமாயிலும் ஆர்டர் போட்டு வாங்கி உள்ளோம். அடுத்த, 10 நாளில் இப்பிரச்னை தீரும். முழுமையாக தீர, இம்மாத இறுதியாகும். விட்டுப்போன ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இம்மாதம் பொருட்கள் முழுமையாக கிடைக்கும்.
தேவை அடிப்படையில், 4,536 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தவிர, சொசைட்டிகள் லாபகரமானதாக செயல்பட தேவையான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளோம். கூட்டுறவு பணியாளர்களுக்கு சம்பளம், காலிப்பணியிடம் நிரப்ப கேட்கின்றனர். ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்குதல் போன்றவற்றை தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கூட்டுறவில் பல்வேறு கடன் வழங்குவதுடன், கல்வி கடனும் வழங்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. சமுதாய நோக்கில் வழங்கப்படும் கடன் என்பதால், இம்மாவட்டத்துக்கு, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் மத்திய அரசு மானியத்தில் தரும் பொருட்களை மட்டுமே, ரேஷனில் வழங்குகின்றனர். தமிழகத்தில் மட்டுமே அவற்றுடன், மாநில அரசால் ராகி உட்பட குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல், தேவையான பொருட்கள் வழங்கப்படுகிறது.
பல நபர்களுக்கு கைரேகை பதிவு பிரச்சினையால், கண் விழி பதிவு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு கண் விழி பதிவிலும் பிரச்சினை எழுந்தால், அவர்களது கை ரேகை பதிவை பெற்று பொருள் வழங்கப்படும். மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதர விலை வழங்க கோரி உள்ளனர். இதுபற்றி வேளாண் ஆணையருக்கு தெரிவித்து நடவடிக்கைக்கு யோசனை தெரிவிக்கப்படும். கூட்டுறவு தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி, உறுப்பினர் சரி பார்ப்பு பணிகள் நடக்கிறது.
ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் வழங்கும் திட்டத்தில், ஜி.எஸ்.டி., கட்டணம் வருவதால், அதுபற்றி அரசு பரிசீலித்து வருகிறது. அதில் சில சிக்கல்கள் உள்ளதால், அது தொடர்பான துறைகளிடம் பேசி வருகிறோம். தவிர, கூட்டுறவு சார்பில், 62 பொருட்களின் கடந்தாண்டு, கடந்த மாதம், இன்றைய நிலைகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது விலையேற்றத்துக்கு தீர்வு காணும் பணியாக அமையும். தற்போது, 16 புதிய பொருட்களை சேர்த்து, அதன் விலைகளையும் கண்காணிக்கிறோம். நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம் என கூறினார்.
இந்தப் பேட்டியின் போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், கூடுதல் ஆட்சியர் சதீஸ், மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu