அரசுப் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க எதிர்ப்பு
கள்ளிப்பட்டி சத்திரம் பள்ளியில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம்.
கோபி அருகே கள்ளிப்பட்டியில் அரசுப் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் பயணிகளுக்கான நிழற்குடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டி சத்திரம் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது இப்பள்ளியில் கழிப்பிடம் கட்டும் பணி நடைபெற்று வரும் இடத்தில் பயணிகளுக்கான நிழற்குடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளதால் பள்ளியின் உள்ளே நிழற்குடை அமைப்பதற்கான முயற்சியும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளியில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்ய வந்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, டி என் பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா தேவி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் பேசியபோது, பள்ளிக் கல்வித்துறை நிழற்குடை அமைக்க தடை இல்லா சான்று வழங்கினால் மட்டுமே நிழற்குடை அமைக்க அனுமதி தரப்படும் என்றும் அதுவரை நிழற்குடை அமைக்கப்படாது என உறுதி அளித்ததால் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu