ஈரோட்டில் சமரச தின விழிப்புணர்வு பேரணி: முதன்மை மாவட்ட நீதிபதி துவக்கி வைத்தார்!

நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றது. பொதுமக்கள் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகும்போது, அவர்களின் வழக்கை சமரச மையத்திற்கு அனுப்பக் கோரலாம். சமரச மையத்தில் எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம். பயிற்சி பெற்ற சமரசர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக வழிகாட்டுவார்கள்.
சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் இரகசியம் காக்கப்படும். சமரசத்தில், வழக்குகளில் எவ்வித மேல்முறையீடு இல்லாமலும், விரைவாகவும், இறுதியான சுமூகத்தீர்வு, கட்டணம் ஏதுமின்றி காணமுடியும். மேலும் சமசரத்தின் மூலம் உங்கள் வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டால், நீதிமன்றக் கட்டணத்தை உங்களிடமே திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடும்.
அந்த வகையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சமரச தீர்வு மைய இயக்குநரின் உத்தரவின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சமரச தினம் கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 9ம் தேதி) ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து நீதிபதிகள், சமரசர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்ட சமரச தின விழிப்புணர்வு பேரணியினை ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகேசன் துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது, மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கி, சம்பத் நகர் வளைவு சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில், தலைமை குற்றவியல் நீதிபதி எஸ்.ராமச்சந்திரன், சமரச மைய தலைவர் வி.பி.சுகந்தி, சமரச மைய செயலாளர் ஆர்.ஸ்ரீவித்யா மற்றும் தலைமையிடத்து அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சமரசர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu