ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசலால் சுவரொட்டி யுத்தம்
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் படங்களை கோஷ்டி பூசல் காரணமாக புறக்கணிப்பதாக பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது புகார் கூறப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ, அதே அளவுக்கு கட்சி கோஷ்டி பூசல் என்பது ஆரம்ப காலம் முதல் இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு வளர முக்கிய அடித்தளமாக இருந்தவர் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோபி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் ஆவார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கட்சியை நடத்திய காலத்தில் செங்கோட்டையனுக்கும், தற்போதைய தி.மு.க. அமைச்சர் முத்துசாமிக்கு இடையே கோஷ்டி பூசல் இருந்தது. பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியை நடத்திய போதும் அது நீடித்த நிலையில், முத்துசாமி தி.மு.க.வுக்கு சென்று விட்டார். அதைத்தொடர்ந்து நடந்த, 2016 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. இதில், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு தோப்பு வெங்கடாசலம் வெற்றி பெற்றார்.
பின்னர், தோப்பு வெங்கடாசலம் அ.தி.மு.க. கட்சியில் வளர்ச்சி அடைந்த நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு ஜெயக்குமாரை வேட்பாளராக அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது. இதனால், தோப்பு வெங்கடாசலம் அ.தி.மு.க.வின் கட்சி அடிப்படை பொறுப்பில் இருந்து விலகி, தனக்கு சீட் வழங்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னர், தற்போது தி.மு.க.வில் இணைந்தார்.
இதனையடுத்து பெருந்துறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயக்குமார் 2021 தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அ.தி.மு.க. நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு, ஈரோடு புறநகர் மாவட்டமாக செயல்பட்டு வந்த மாவட்ட கழக அமைப்பு, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடுபுறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது செங்கோட்டையனின் படங்களை பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் சுவரொட்டிகளில் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு செங்கோட்டையனின் கடுமையான உழைப்பும் ஒரு காரணமாகும். ஆனால், அவரின் படத்தை புறக்கணித்து அரசியல் செய்ய துவங்கி விட்டதாக கட்சியினர் புலம்ப ஆரம்பித்து விட்டனர். மேலும், இதில், செங்கோட்டையனின் படத்தை போஸ்டர்களில் வைக்காதது பெருந்துறை அ.தி.மு.க. ஆதரவாளா்களிடையே அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu