ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு: ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு: ஏற்பாடுகள் தீவிரம்
X

வாக்கு எந்திரங்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல் தயாராகும் வாகனங்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Erode News Today: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., சுயேச்சைகள் என மொத்தம் 77 பேர் போட்டியிடுகிறார்கள். வாக்குச்சாவடி மையங்கள்தோறும் தலா 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக சாய்வு தளம் மற்றும் வீல் சேர் உள்ளிட்டவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே ஈரோட்டில் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட நேரம் வரிசையில் நின்று சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதால், 238 வாக்குச்சாவடி மையங்களின் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு இடையன்காட்டுவலசில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஸ்மார்ட் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவில் எல்லைக்கோடுகள் போடப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 33 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து 238 வாக்குச்சாவடிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான 34 வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவ வீரர்கள் மற்றும் கூடுதல் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், துணை ராணுவ வீரர்கள், ரெயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆதாரமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்த கணக்கு எண் அட்டை (பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, பாராளுமன்ற, சட்டமன்ற சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்க ப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!