ஈரோடு மாவட்டத்தில் 1,400 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 1,400 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
X

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் 1,400 மையங்கள் மூலம் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ஈரோடு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். கணேசமூர்த்தி எம்.பி. முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:

தமிழகத்தில் மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு மக்களைத் தேடி மருத்துவம் வழங்கிய தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத்துறை அமைச்சர் சீரிய முயற்சிகளினால் இன்று (27.02.2022) நாடு முழுவதும் இருக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மூலமாக வழங்கப்படுகிறது.


இம்முகாமில் 2,00,816 குழந்தைகளுக்கு 1400 மையங்களில் 5533 பணியாளர்களைக் கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி செய்திடவும் 97 அரசுத்துறை வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது இல்லத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், இன்று தங்களது பகுதியில் நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் மையத்தில் இரு துளி போலியோ சொட்டு மருந்து வழங்கி தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை நலனை பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இம்முகாமில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சோமசுந்தரம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!