ஈரோட்டை உலுக்கிய சிவகிரி இரட்டை கொலை வழக்கில் மூவர் கைது!

ஈரோட்டை உலுக்கிய சிவகிரி இரட்டை கொலை வழக்கில் மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் முதிய தம்பதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை ஈரோட்டையை உலுக்கியது.
மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தினர்.
சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இது போன்று ஆதாய கொலைகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர்.
கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிவகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை வரும் 20ம் தேதிக்குள் கைது செய்யாவிட்டால் பா.ஜ.க. சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், அதில் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான பணிகளில் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அறச்சலூர் அருகே உள்ள ராம்நகர் ஜல்லிமேடு, மேற்கு தலவுமலையை சேர்ந்த ஆச்சியப்பன் (வயது 48), அறச்சலூர் மேற்கு வீதியை சேர்ந்த மாதேஸ்வரன் (53), அறச்சலூர் அருகே உள்ள நடுப்பாளையம் மெயின் வீதியை சேர்ந்த ரமேஷ் (52) ஆகிய மூவரையும் பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினர். அதில் சில பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிவகிரி தம்பதி கொலை வழக்கில் போலீசார் இரவு பகல் பாராமல் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில் ஆச்சியப்பன் , மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூவரை பிடித்து விசாரணை நடத்தினோம்.
இதைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்துள்ளோம். இந்தக் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் முழு தகவலும் தெரிய வரும் என்றனர்.
மேலும் பிடிபட்ட 3 பேரிடம் பல்லடத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளையிலும் தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த கொலை வழக்கு மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu