பவானி: அம்மாபேட்டையில் மாட்டை திருடி சந்தையில் விற்ற 3 பேர் கைது!

பவானி அடுத்த அம்மாபேட்டையில் மாட்டை திருடி சந்தையில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள மாரப்பனூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (50). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 5க்கு மேற்பட்ட பசு மாடுகளை கடந்த 6ம் தேதி, தனது வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில், கட்டி வைத்து விட்டு இரவு தூங்க சென்றுள்ளார்.
பின்னர், மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, மாட்டுக் கொட்டகையில் இருந்த பசு மாடு ஒன்று காணமல் போயிருந்ததை அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில், இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் மாதேஸ்வரன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையில் போலீசார் அந்தியூர் -மேட்டூர் ரோட்டில், வாகன சோதனை மேற்கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்திய போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதில், சந்தேகமடைந்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து, விசாரிக்கையில், ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தை சேர்ந்த மாது மகன் அயப்பன் (30), அதே பகுதியைச் சேர்ந்த அல்லி முத்து மகன் முருகேசன் (38), மாதப்பன் மகன் விஜய சந்திரன் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாடு திருடியது தெரிய வந்தது. எனவே போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் மூவரும், மாதேஸ்வரனின் பசு மாட்டை திருடி சென்று, அந்தியூர் கால்நடை சந்தையில் விற்பனை செய்து விட்டு வாகனத்தில் திரும்ப வந்து கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் பணம் ரூ.15 ஆயிரம் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu