பெருந்துறை: அரசு வேலை வாங்கித் தருவதாக துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி; 5 பேர் கைது
கைது செய்யப்பட்ட 5 பேரையும் படத்தில் காணலாம்.
பெருந்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள் (வயது 51). இவர் ஆப்பக்கூடலில் உள்ள சக்தி சர்க்கரை ஆலையில் வரவு-செலவுகளை கண்காணிக்கும் வகையில் அரசு வருவாய் துறையின் மூலம் நியமிக்கப்பட்ட துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 2022ம் ஆண்டு பெருந்துறையில் பணியாற்றியபோது, சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வாரிசு சான்றிதழில் திருத்தம் மேற்கொள்வதற்காக அவரை அணுகியுள்ளார். அப்போது, கார்த்திகேயன் தான் காவல் துணை கண்காணிப்பாளராக உள்ளதாக தெரிவித்து, சுந்தராம்பாளின் கைப்பேசி எண்ணைப் பெற்றுள்ளார்.
இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு சுந்தராம்பாள் நம்பியூரில் பணியாற்றியபோது, வருமான வரித்துறையில் வேலை இருப்பதாகவும், அதனை தங்களது மகன் சண்முகராஜூக்கு வாங்கித் தருவதாகவும் கூறி சுந்தராம்பாளிடம் இருந்து கார்த்திகேயன் பணம் கேட்டுள்ளார்.
இதை உண்மை என நம்பிய சுந்தரம்பாள், கடந்த 2023ம் ஆண்டு முதல் கார்த்திகேயனுக்கும் அவரது கூட்டாளியான, சென்னை மாவட்டம் ரெட் ஹில்ஸ், புள்ளிலைன் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ராமதாஸ் மகன் கலைவாணன் (வயது 37) ஆகியோருக்கு 2 தவணைகளாக ரூ.55 லட்சமும் என பல தவணைகளாக சேர்த்து ரூ.2 கோடிக்கு மேல் பணம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன் கலைவாணன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் பணத்தை பங்கு பிரித்துக் கொண்டதாக தெரிகிறது. பணத்தை வாங்கிக் கொண்ட கார்த்திகேயன், கலைவாணன் கும்பல் கூறியபடி அரசுப் பணியை வாங்கித் தராமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் நம்பிக்கை இழந்த சுந்தராம்பாள் கார்த்திகேயன், கலைவாணன் ஆகியோரிடம் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டு வந்தார்.
பணம் தராமல் ஏமாற்றி வந்த கார்த்திகேயன், கலைவாணன் பணத்தை திருப்பி தர முடியாது என்றும், மீறி கேட்டால் மகன் சண்முகராஜூவை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த சுந்தராம்பாள் இதுகுறித்து, கடந்த 19ம் தேதி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கலைவாணன், திருவள்ளுவர் மாவட்டம் அம்மனபாக்கம் தெலுங்கு காலனி, பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்த வினோத் (வயது 29), சென்னை ரெட் ஹில்ஸ் 5வது வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 24) , திருவள்ளுவர் மாவட்டம் காந்திநகர் நகர் அவஞ்ஜிவாக்கத்தைச் சேர்ந்த சின்னதுரை (வயது 28), திருவள்ளுவர் மாவட்டம் புள்ளி லைன் பஜனை கோயில் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 32) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கார்த்திகேயனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu