கல்குவாரியை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. இதற்காக, மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களாக வழங்கினர். அப்போது, ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் எலத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட எலத்தூர், பள்ளத்தூர்காலனி, கேங்குழி, எலத்தூர் செட்டிப்பாளையம், கரிய கவுண்டன்பாளையம், கண்ணாங்காட்டுபாளையம் கிராமத்தைச் ஆகிய 6 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: நாங்கள் நம்பியூர் வட்டம் எலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுற்றி 8000 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.எங்கள் பகுதியின் குடியிருப்பை மத்தியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் கல் கிரஷர் அரைக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை எந்திரம் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வீடுகள், கோவில்கள், விவசாய நிலம், மழலையர் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், தாய் சேய் நல மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ளன. ஆலை இயக்கத்தினால் ஏற்படும் சத்தம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ஏற்படும் தூசி படலங்கள் கிராமம் முழுவதும் மாசுவை ஏற்படுத்தி வீடுகளிலும் படர்ந்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூச்சுவிட சிரமப்படுகின்றனர். மேலும் கண் எரிச்சல் தலைவலி தொண்டை வலி ஏற்படுகிறது. கல்லை வெடி வைத்து தகர்த்து வருவதால் நில அதிர்வுகள் ஏற்பட்டு வீட்டில் சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கல் ஆலை இயக்கத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu