குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்: குழந்தைகள் பலி

குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்: குழந்தைகள் பலி
X

குழந்தைகளுடன் பெண் குதித்த கிணறு.

பெருந்துறை அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்ணால் குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சகாயசெல்வி (வயது 25). இவர்களுக்கு வினில் குமார்(4), என்ற மகனும், மாளவிகா (1) என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுபுதூர் பகுதியில் தங்கி இருந்தார்.

ரமேஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். ரமேஷ், சகாயசெல்வி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். கணவன்- மனைவி இருவருக்குமிடையே குடும்ப செலவு சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது சகாயசெல்வி தனக்கு வயிற்றுவலி இருப்பதாகவும், ஸ்ப்ரைட் வாங்கப் பணம் வேண்டும் என்றும் ரமேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ் பணம் கொடுக்காமல் வேலைக்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சகாயசெல்வி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அந்தப் பகுதியில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள 60 அடி கிணறு அருகே சென்று திடீரென சகாயசெல்வி முதலில் இரண்டு குழந்தைகளை கிணற்றுக்குள் வீசி விட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கிணற்றில் தற்போது 35 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. இதில் குழந்தைகள் வினில்குமார், மாளவிகா பரிதாபமாக இறந்தனர். சகாயசெல்வி மட்டும் படிக்கட்டில் ஏறி அமர்ந்து கொண்டார்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதலில் குழந்தை மாளவிகா உடலை மேலே எடுத்தனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வினில்குமார் உடலையும் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக குழந்தைகள் உடல் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல் தாய் சகாயசெல்வியையும் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்க பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!