நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் காந்தி உறுதி

நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி உறுதியளித்துள்ளார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி , ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள, சென்குமார் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.

ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு, நெசவாளர்களுக்கு கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ், கைத்தறி உபகரணங்களையும், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உதவி தொகையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, சென்னிமலையில்தான் முதன்முதலில் நெசவாளர் குறைகளை கேட்க வந்துள்ளோம். தி.மு.க நெசவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இனி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசும்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் வளர்ச்சி பணிகளுக்காக அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் முதல் ஆய்வு கூட்டமாக சென்னிமலையில் தொடங்கியுள்ளது. கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக, அமைச்சர்கள் ஆர்.காந்தி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி துணி ரகங்களை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மை செயலாளர் அபூர்வா, கைத்தறி துறை ஆணையர் பீலா ராஜேஷ், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!