ஈரோட்டில் தீபாவளியையொட்டி 267 இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி
ஈரோடு மாவட்டம் முழுவதும் 280 பேர் பட்டாசு கடைகளை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பித்து இருந்தனர். இதனை மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்திட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலருக்கு அனுப்பி வைத்தார்.இதைத்தொடர்ந்து கடைகள் அமைக்க விண்ணப்பித்த இடத்தில் வருவாய் துறை, போலீஸ் துறை, தீயணைப்பு துறையினர் தனித்தனியாக ஆய்வு செய்தனர். இதில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் கேட்டு வந்த 280 விண்ணப்பங்களில் 267 கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தால் 13 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் பட்டாசு கடைகள் அமைக்க குறைந்தளவே விண்ணப்பங்கள் வந்தது. இதன் காரணத்தால் கடந்த ஆண்டு 110 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினோம்.இந்த ஆண்டு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க வந்த விண்ணப்பங்களில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து, 267 கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளோம். 13 விண்ணப்பங்களை நிராகரித்துள்ளோம். தற்காலிக பட்டாசு கடைகளில் மணல் நிரம்பிய வாலி, 300 லிட்டர் தண்ணீர் நிரப்பிய தொட்டி, புகைபிடிக்க கூடாது என்ற எச்சரிக்கையை வைத்திருக்க வேண்டும்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசுடன், பட்டாசினை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். மேலும், பாதுகாப்பான தீபாவளி பண்டிகையை கொண்டாட தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu