ஈரோட்டில் ரூ.13.5 லட்சம் மதிப்பில் மாடி தோட்டம் அமைக்க தொகுப்பு

ஈரோட்டில் ரூ.13.5 லட்சம் மதிப்பில் மாடி தோட்டம் அமைக்க தொகுப்பு
X

பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கும் கலெக்டர்.

ஈரோடு மாவட்டத்தில் ரூ.13.5 லட்சம் மதிப்பில் மாடி தோட்டம் அமைக்க தொகுப்பு வழங்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், ஊட்டம் தரும் காய்கறி தோட்டம், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள், மாடி தோட்ட தொகுப்பு வழங்கும் திட்ட நிகழ்ச்சி நடந்தது.

இதுகுறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பயன் பெறும் வகையில், ரூ.13.5 லட்சம் செலவில், மாடித்தோட்டம் அமைக்க தேவையான தொகுப்பு வழங்கப்படுகிறது. ஒரு தொகுப்பில் 6 வகை காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள், 2 கிலோ தென்னை நார் கட்டி, உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், இயற்கை பூச்சி விரட்டி என 900 ரூபாய் மதிப்பில் மாடித்தோட்ட தொகுப்பு மானியத்தில் 225 ரூபாய்க்கு வழங்கப்படும். இவ்வாறு 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும்.

ஊரக பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் காய்கறி தோட்டம் அமைக்க, கத்தரி, மிளகாய், வெண்டை, தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல் பூசணி, கீரை என 12 விதைகள் அடங்கிய 60 ரூபாய் மதிப்பிலான தொகுப்பு, 15 ரூபாய்க்கு வழங்கப்படும். அதுபோன்று பல்வேறு தொகுப்புகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story