இழப்பீடு வழங்காததால் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவு

இழப்பீடு வழங்காததால் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவு
X

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நீதிமன்ற ஊழியர்கள்.

நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு. வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்திய, 8 நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கொல்லம்பாளையத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைப்பதற்காக 5.45 ஏக்கர் நிலம் 1986ஆம் ஆண்டு ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதில் கே.பி.நடராஜன், குப்பு விஜயன், தட்சிணாமூர்த்தி, அனிதா, தினேஷ்குமார், மணிமேகலை, லட்சுமி நாராயணன், சிந்து ஆகிய எட்டு பேருக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். இவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு மூன்று லட்சத்து 500 ரூபாய் கணக்கிட்டு இழப்பீட்டு தொகை வழங்க 1999 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பின்னர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களிலும் மேல்முறையீட்டு வழக்குகள் நடைபெற்றன. அதிலும் இழப்பீட்டுத் தொகை வழங்க உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை 78 லட்சத்து 73 ஆயிரத்து 635 ரூபாய் வழங்கப்படாததால் ஈரோடு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50 கணினிகள், 50 டைப்ரைட்டர் மெஷின், 50 பீரோ, 100 மின் விசிறிகள், 500 நாற்காலிகள் 400மேஜை, 3 லிஃப்ட்கள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது..

இந்த உத்தரவு நகலுடன் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். இதனையடுத்து நீதிமன்ற ஆமினா ரவிகுமார் உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்வதற்கான நோட்டீஸை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுப்பதாக கூறினார். இதற்கு மனுதாரரும் ஒப்புக்கொண்ட நிலையில், ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

பின்னர் நில உரிமையாளர்கள் தரப்பு வழக்கறிஞர் சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 15-ம் தேதிக்குள் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு வழங்காவிடில் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பொருள்களை ஜப்தி செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தோம். சற்று கால அவகாசம் அளிக்குமாறு கூறியதால் ஜப்தி நடவடிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றார்.

இதன் பின்னர், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் திரும்பி சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இழப்பீட்டு தொகை வழங்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையே ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தவிட்டிருப்பது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story