அத்தாணியில் மூட்டைகளை ஏற்றி இறக்க வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்த எதிர்ப்பு
வடமாநிலத் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என உள்ளூர் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு 7 இடங்களில் கிடங்குகள் உள்ளன.இந்தக் கிடங்குகளில் அரிசி ,பருப்பு , உரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண் விற்பனை சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகளிலிருந்து பொதுமக்களுக்கு. வினியோகம் செய்ய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.அந்தியூர் அருகே உள்ள அத்தாணி செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது.
இங்கு அப்பகுதியைச் சேர்ந்த 16 மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்.இவர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ஏற்று இறக்கு கூலியாக ரூபாய் 1.55 காசுகள் வழங்கப்படுகிறது.இந்நிலையில் திடீரென அத்தாணியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் வடமாநில தொழிலார்கள் ஒப்பந்த அடிப்படையில் நேற்று முதல் வேலை செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர்.
வட மாநிலத் தொழிலாளர்களை பணி செய்ய அனுமதித்ததற்கு ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்த அத்தாணி, செம்புளிச்சாம்பாளையம், பெருமாபாளையம் பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.வடமாநிலத்தவர்களை நுகர்பொருள் வாணிப கிடங்கில் வேலை செய்ய அனுமதித்தால் உள்ளூர் தொழிலாளிகள் பெரிதும் பாதிப்படைவர் என்றும், இந்தக் கூலியை நம்பிதான் 16 குடும்பங்கள் உள்ளதாகவும் எனவே வடமாநிலத்தவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பணி செய்ய அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே கிடங்கு பொறுப்பு அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் குறித்த நேரத்தில் செல்ல வேண்டியுள்ளதால் அதில் தொய்வு ஏற்படாமல் இருக்க உள்ளூர் தொழிலாளர்கள் இல்லாத பட்சத்தில், வடமாநிலத்தவர்கள் பயன்படுத்துவதாக கூறினர்.இதனை உள்ளூர் தொழிலாளிகள் ஏற்காமல் வடமாநிலத்தவர்கள் அனுமதிக்கக்கூடாது , உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமே வாகனங்களில் மூட்டைகளை ஏற்றி இறக்கும் வேண்டும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu