உலக காசநோய் தினம்: ஈரோட்டில் ஆட்சியர் தலைமையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (மார்ச் 24) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை வைத்தார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது, காசநோய் ஒரு உயிர் கொல்லி நோய். இது காற்றின் மூலம் பரவும் சமுதாய வியாதியாகும். காசநோய்க்கான அறிகுறிகள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேற்பட்ட சளியுடன் கூடிய இருமல், மாலை நேரக்காய்ச்சல், இரவில் வியர்த்தல், பசியின்மை, உடல் எடை குறைவு, சளியுடன் கூடிய இரத்தம், நெஞ்சு வலி போன்றவைகள் ஆகும்.
காசநோய்க்கான பரிசோதனைகளான சளி பரிசோதனை மற்றும் ஊடுகதிர் பரிசோதனை இம்முகாம்களில் நவீன பரிசோதனை கருவிகளைக் கொண்டு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
காசநோயாளிகளுடன் வசிப்பவர்கள் மற்றும் சமூகத் தொடர்பில் இருப்பவர்கள், கட்டுப்படாத சர்க்கரை நோய் உள்ளவர்கள், பல்வேறு உடல் பிரச்சனைகளால் உடல் மெலிந்து பலவீனமானவர்கள் காசநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
காசநோய் இல்லா ஊராட்சிக்கான தகுதி வரைமுறைகள் ஊராட்சி மக்கள் தொகையில் 1000க்கு 30 நபர்களுக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 1000க்கு ஒருவருக்கும் குறைவாக காசநோய் கண்டறியப்பட்டு அவருக்கு 85 சதவீதத்திற்கும் குறைவாகாமல் சிகிச்சை பெற்று குணமாக்கப்பட்டும், காசநோய் கண்டறிப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் குறைவாகாமல் வீரிய காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும்.
காசநோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள் 100 சதவீதம் பேருக்கும் Nikshay Poshan Yojana திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வீதம் சிகிச்சை பெறும் 6 மாத காலத்திற்கு அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டும், மேலும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100 சதவீதம் பேருக்கும் Nikshay mithra திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டும் இருப்பின் அந்த ஊராட்சி காசநோய் இல்லா ஊராட்சியாக அறிவிக்க தகுதி பெற்றதாகும்.
ஆகவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் இந்த வரைமுறைகளை கையாண்டு காசநோய் இல்லா ஊராட்சியாக தங்களின் ஊராட்சியை உருவாக்க முனைப்போடு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, பேரோடு (சித்தோடு), கரண்டிப்பாளையம், மூங்கில்பாளையம், பலமங்களம், எழுநூத்திமங்கலம், பிரம்மதேசம், குருப்பநாய்க்கன்பாளையம், சிங்கம்பேட்டை, கோணமூலை, ஆண்டிப்பாளையம் ஆகிய 10 ஊராட்சிகளின் தலைவர்களுக்கு காசநோய் இல்லா ஊராட்சிக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் உலக காசநோய் தின உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்) மரு.இராமச்சந்திரன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஜி.அருணா, துணை இயக்குநர்கள் மரு.தி.ரா.இரவீந்திரன் (தொழுநோய்), மரு.தி.கவிதா (குடும்ப நலம்), மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.எம்.கார்த்திகேயன் உட்பட மருத்துவ அலுவலர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu