ஈரோடு: புரட்டாசி 3வது சனிக்கிழமை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

Perumal Quotes in Tamil
Perumal Quotes in Tamil
புரட்டாசி 3வது சனிக்கிழமையான இன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
புரட்டாசி மாதத்தில், சனிக்கிழமை நாட்களில் பெருமாளை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வீடுகளிலும் பக்தர்கள் விரதம் இருந்து, பெருமாள் படத்தை வைத்து வழிபட்டு, துளசி தீர்த்தத்தை குடித்து விரதத்தை முடிப்பார்கள். இதையடுத்து இன்று புரட்டாசி மாதத்தின் 3வது சனிக்கிழமையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் துளசி மாலையுடன், கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு வழங்கி வழிபட்டார்கள்.
ஈரோடு கோட்டை பெருமாளுக்கு, புரட்டாசி சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோபி அருகே உள்ள பாரியூர் ஸ்ரீதேவி பூதேவி ஆதிநாராயண பெருமாள் கோவிலில், காலை 7 மணிக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, ஆதி நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தந்தார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.
சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் உள்ள ஆதி நாராயண பெருமாள் கோவிலில், இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அலமேலுமங்கை, நாச்சியார் அம்மை சமேத ஆதி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உப்பிலிபாளையத்தில் உள்ள அணிரங்க பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பவானி அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில், மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை அழகுராஜா பெருமாள் கோவிலில், இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடத்தி மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களின் 'கோவிந்தா கோவிந்தா' கோஷம் முழங்க, தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் குருவரெட்டியூர் சித்தேஸ்வரன் மலைக்கோயில், பவானி ஊராட்சிக்கோட்டை வேதகிரிஸ்வரர் கோயில் உள் பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதிகாலை முதல் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்றது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu