ஈரோடு: மொடக்குறிச்சி அருகே சாமிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம் ரூ.13 ஆயிரத்துக்கு ஏலம்

பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சாமிக்கு சிவராத்திரி அன்று பயன்படுத்திய எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்ட போது எடுத்த படம்.
மொடக்குறிச்சி அருகே மகாசிவராத்திரி விழாவையொட்டி, சாமிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம் ரூ.13 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள விளக்கேத்தியில் புகழ்பெற்ற ஸ்ரீ பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி சாமிக்கு பயன்படுத்தப்படும் எலுமிச்சை பழம், வெள்ளி மோதிரம், நாணயம் போன்றவை ஏலத்தில் விடுவது வழக்கம்.
இதனை தொடர்ந்து, இந்தாண்டு நடைபெற்ற மகாசிவராத்திரி பண்டிகையையொட்டி பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர கோவிலில் ஈஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மத்தியில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சாமிக்கு சிவராத்திரி அன்று பயன்படுத்திய எலுமிச்சை பழம், சாமி நெற்றியில் வைக்கப்பட்ட வெள்ளி நாணயம், கையில் போடப்பட்ட வெள்ளி மோதிரம் ஆகியவை ஏலத்தில் விடப்பட்டது.
இதில், தங்கராஜ் என்பவர் ஒரு எலுமிச்சை பழத்தை 13 ஆயிரம் ரூபாய் கொடுத்தும், மொடக்குறிச்சியை சேர்ந்த ரவிக்குமார், பானுபிரியா தம்பதியினர் வெள்ளி நாணயத்தை 35 ஆயிரம் ரூபாய்க்கும், இதே போன்று வெள்ளி மோதிரத்தை அறச்சலூர் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் 43 ஆயிரத்து 100 ரூபாயும் கொடுத்து ஏலத்தில் எடுத்தனர்.
இதற்கு, முன்னதாக சாமிக்கு பயன்படுத்திய மூன்று பொருட்களையும் ஏலத்தில் எடுக்க ஆரம்ப விலையில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு பொருட்களை ஏலத்தில் எடுத்து சாமியை வணங்கி சென்றனர். ஏலத்தில் எடுக்கப்படும் பொருட்களை வீட்டில் சாமி அறை, தொழில் செய்யும் இடம் ஆகியவற்றில் வைக்கும் போது வீட்டில் ஐஸ்வரியம் கூடும், ஆரோக்கியம் அதிகரிக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu