ஈரோடு மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணி 80 சதவீதம் நிறைவு: அதிகாரிகள் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணி 80 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பாஸ்கர், துணை இயக்குநர் பிரிசில்லா ஆகியோர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீட்டு விலங்குகள் கணக்கெடுக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பில் கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், செல்போன் எண், அவர்களிடம் உள்ள நில அளவு, முக்கிய தொழில், கல்வித் தகுதி, கால்நடைகளின் எண்ணிக்கை இனம், வயது, பாலினம் குறித்த தகவல் கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கால்நடைகளை கணக்கெடுத்து வருகின்றனர். பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு, நாய், கோழி, பன்றி, குதிரை மற்றும் இதர கால்நடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தெரு நாய்கள், வீட்டு நாய்களும் தனித்தனியாக கணக்கெடுக்கப்படுகிறது. இந்த பணி முடிந்தால் ஈரோடு மாவட்டத்தில் எந்தெந்த கால்நடைகள் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளன என்பது தெரியவரும்.
கால்நடைகளின் எண்ணிக்கையை பொறுத்துதான் மருந்து கள் மற்றும் தடுப்பூசிகள் பெற முடியும். ஈரோடு மாவட்டத்தில் தற்போது கால்நடை கணக்கெடுக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 100 சதவீத கணக்கெடுப்பு பணி முடிந்து விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu