ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவக்கம்
X

தேர்தல் மன்னன் பத்மராஜன். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. தேர்தல் மன்னன் பத்மராஜன் 233வது முறையாக மனு தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. தேர்தல் மன்னன் பத்மராஜன் 233வது முறையாக மனு தாக்கல் செய்தார்.

இடைத்தேர்தல்:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 27ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் பல்வேறு அரசியில் கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் இறங்கி உள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். கட்சி பிரமுகர்கள் நாள்தோறும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

வேட்பு மனு தாக்கல்:-

வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். பொதுப்பிரிவு வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ரொக்கமாக மட்டுமே செலுத்த வேண்டும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 7-ம் தேதி கடைசி நாளாகும். 8-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி மாதம் 10-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

233வது முறையாக மனு தாக்கல்:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை துவங்கியது. முதல் நாளான இன்று தேர்தல் மன்னன் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (65) என்பவர் 233வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவர் கூறியதாவது, முதல் முதலாக 1988-ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன். இதுவரை 32 எம்.பி. தேர்தல், 6 ஜனாதிபதி தேர்தல்கள், 6 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்கள், கர்நாடகாவில் 3 தேர்தல்கள், கவுன்சிலர் தேர்தல்கள், பஞ்சாயத்து யூனியன் தேர்தல்கள், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளேன்.

முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். முதலில் விழிப்புணர்வுக்காக தேர்தலில் போட்டியிட்டேன். பின்னர் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் எனது நண்பர்கள் உறவினர்கள் கிண்டலடித்தனர். பின்னர் நான் தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றேன். எரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். இதற்காக 233 தடவையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!