நசியனூர், கோபியில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று செயல்படும் தொழில் நிறுவனங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

கோபிசெட்டிபாளையத்தில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று,பேக்கரி நடத்தி வரும் பயனாளியிடம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்துரையாடிய போது எடுத்த படம்.
நசியனூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ சார்பில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று செயல்படும் தொழில் நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் தாட்கோ சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று தொழில் நிறுவனங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின் போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் நசியனூர், வீரப்பம்பாளையம் பகுதியில் "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்" கீழ் ஜவஹர் என்பவர் ரூ.18.81 லட்சம் முதலீட்டில் ரூ.6.30 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று (மெட்டா ஹியூமன் பிட்னெஸ் சென்டர்) உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறார் .
இதனை, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, பயனாளியிடம் கலந்துரையாடினார். அப்போது, பயனாளி மாவட்ட ஆட்சியரிடம், தமிழ்நாடு அரசின் மூலம் 35% முதலீட்டு மானியமும், வங்கிக்கடனை முறையாக திருப்பி செலுத்துவதால் 6% வட்டி மானியமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் தான் பொருளாதார ரீதியாக மேன்மையடைந்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் "குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021"ன் கீழ் "ஒரு முறை பயன்படுத்தும் மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான மாற்றுப் பொருட்கள்" உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு முதலீட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நசியனூர், வில்லரசம்பட்டி பகுதியில் இயங்கும் "ஈகோ பாக்ஸ் எண்டர்ப்ரைஸ்" நிறுவனத்தில் ரூ.68 லட்சம் கடனுதவியுடன் தொடங்கி அரசு மானியம் ரூ. 18.32 லட்சம் பெற்று "மறுசுழற்சி செய்யும் பைகள்" தயாரிக்கும் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், பயனாளியிடம் மூலப்பொருள்கள் எளிதாக கிடைக்கப்பெறுகின்றதா. பெற்ற கடனை முறையாக செலுத்துகிறீர்களா. தயாரிப்பு பொருட்கள் எங்கெங்கே அனுப்பப்படுகிறது என கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் நகராட்சி, ராம்நகர் 2-வது வீதியில் தாட்கோ சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் சுதர்சன் என்பவர் ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 66 முதலீட்டில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 773 மானியம் மற்றும் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 40 கடனுதவி பெற்று இயன்முறை மருத்துவ மையம் அமைத்து செயல்படுத்தி வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அய்யம்பாளையம் பகுதியில் தயாள் ஸ்ரீ என்பவர் ரூ.9 லட்சத்து 88 ஆயிரத்து 176 முதலீட்டில் ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 862 மானியம் மற்றும் ரூ.5 லட்சத்து 92 ஆயிரத்து 905 கடனுதவி பெற்று பேக்கரி நடத்தி வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு. ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வுகளின் போது, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) அர்ஜுன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu