நம்பியூர்: கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகை

நம்பியூர்:  கல்குவாரியை பொதுமக்கள் முற்றுகை
X

கல்குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்களை சமாதானபடுத்தும் அதிகாரிகள்.

நம்பியூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சி பகுதியில் நாகமலை, உத்தாங்காடு, கேங்குழி, கன்னாங்காட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 3 தனியார் கல் உடைக்கும் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடந்த சில வாரங்களாக அதிக அளவில் வெடி வைத்து பாறைகளை உடைத்து எடுப்பதினால் அருகில் உள்ள வீடுகள் சேதம் அடைந்து வருகிறது. மேலும் தற்போது போடப்பட்டுள்ள சாலைகள் மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் அதிவேகமாக சென்று விபத்துகள் ஏற்படுகின்றன என பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் நாகமலை, உத்தாங்காடு, கேங்குழி, கன்னாங்காட்டுபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நாகமலை கல்குவாரிக்கு சென்றனர். அங்கு கல்குவாரியில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். பின்னர் கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நம்பியூர் தாசில்தார் மாரிமுத்து அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் அவரிடம், எலத்தூர் பகுதியில் செயல்படும் அனைத்து கல்குவாரிகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதன்பின்னர் தாசில்தார் கூறும்போது, கல்குவாரிகளை மூடுவது குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!