ஈரோடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி!

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி!
X
ஈரோடு மாவட்டத்தில், வெள்ளப்பெருக்கு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள், முதல்நிலை தன்னார்வலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பங்கேற்ற மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு குறித்து அறிவிப்பு வெளியானவுடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி நேற்று (மே.15) நடைபெற்றது.

அதன்படி, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிறுவனத்தில் உள்ள அலுவலர்கள் மூலம் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மேடான பகுதியான ஜீவாசெட் பகுதியில் தங்க வைப்பது குறித்தும், சத்தியமங்கலம் நகராட்சி பழைய ஆற்று பாலத்தில் சிக்கி தவிக்கும் மக்களை படகுகள் மூலம் மீட்பது, நஞ்சைபுளியம்பட்டியில் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட பொதுமக்களை தயார் நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தல் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.


இதேபோல், வைராபாளையம் காவேரி கரை பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் மீட்பது, மொடக்குறிச்சி காங்கேயம்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு காவல்துறையின் மூலம் பாதுகாப்பு அளிப்பது, கொடுமுடி கிளாம்பாடி சத்திரப்பட்டி பகுதியில் அனைவருக்கும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முறையாக வழங்குதல், பவானி அரசு மருத்துவனையினை கந்தன்பட்டறை பகுதியிலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக மருந்துகள், சிகிச்சைகள் வழங்குவதற்கு தயார் நிலையில் வைத்திருத்தல் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது

மேலும், நெரிஞ்சிபேட்டை பகுதியில் வெள்ளம் ஏற்படும் நிலையில் தடுப்பணையில் ஷட்டர் மூலம் நீரை வெளியேற்றுதல் ஆகியவை குறித்து, காவல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள், முதல்நிலை தன்னார்வலர்கள் பங்கேற்ற மாதிரி ஒத்திகை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, வெள்ளப்பெருக்கு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இதில், துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story