800 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலிங்கராயன் பாசன வாய்க்காலுக்கு மரியாதை
காலிங்கராயன் பாசன வாய்க்காலுக்கு மரியாதை செலுத்தும் பொதுமக்கள்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் பவானி ஆற்று நீரானது பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாசன வாய்க்கால் மூலம் நேரிடையாகவும் மறைமுகவாகவும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் விவசாயிகள் மஞ்சள், நெல், வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் சாய சலவை மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுகள் வாய்க்காலில் கலப்பதால் நீர் மாசடைவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலிங்கராயன் வாய்க்கால் விவசாயிகள் மன்றம் சார்பில் ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் அருகே குலவிளக்கு அம்மன் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் தீபாராதனை பெருவிழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கலந்து கொண்டு தீபாராதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது காலிங்கராயன் வாய்க்காலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பால், இளநீர், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திருமஞ்சனங்களை கொண்டு வாய்க்காலில் ஊற்றினார்கள்.
பின்னர் வாய்க்காலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு முளைப்பாரியும், தீபமும் விடப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலிங்கராயன் வாய்க்காலை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். காலிங்கராயர் பெயரிலேயே விவசாயக் கல்லூரி நிறுவ வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu