எளிய மக்களின் நம்பிக்கை நாம் தமிழர் கட்சி: சீமான்

எளிய மக்களின் நம்பிக்கை நாம் தமிழர் கட்சி: சீமான்
X
ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விவசாயி சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

நம் கண் முன்னே இன்னொரு தாய் நிலத்தில் எமது சொந்தங்கள் அழிக்கப்பட்டபோது நமக்காக யாரும் இல்லையே என்று ஏமாந்து போன தன்மானம் மிக்க தமிழ் பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள். இனி யாரையும் நம்பி பயன் இல்லை. நமது விடுதலை, நமது உரிமையை வென்றேடுக்க நாமே போராடுகிறோம். ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்து தொடங்கிய கட்சியாக இல்லாமல், ஒரு கட்சியின் வாரிசு என்ற முறையில் வராமல், பொருளாதார வலிமையான கட்சியாக இல்லாமல், எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் எளிய மக்களின் நம்பிக்கையாக நாம் தமிழர் கட்சி உள்ளது. தேர்தல் என்பது வெற்றியை மட்டும் கொண்டது அல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பதுதான் முதன்மையான வெற்றி. நாம் யாரோடும் கூட்டணி சேராமல் தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறோம். நமது நோக்கம் உயர்ந்தது. இந்த நோக்கத்துக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து தேர்தலை சந்தித்து வருகிறோம். 2016-ம் ஆண்டு 1.1 சதவீதம் வாக்குகளை நீங்கள் கொடுத்தீர்கள். 2019-ம் ஆண்டு 17 லட்சம் வாக்குகளை தந்து எங்களுக்கு பெரிய நம்பிக்கையை விதைத்தீர்கள். அதே உற்சாகத்தோடு 2021 தேர்தலில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சரி சம இட ஒதுக்கீடு செய்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். தனித்துவமாக களத்தில் நிற்கிறோம். மண்டியிட்டு சரண் அடைவது தமிழர் பாரம்பரியம் கிடையாது. சரண் அடைந்தாலும் சண்டையிட்டு வீழ்வது வீரம். உங்கள் பிள்ளைகளாகிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். ஏதோ 4 அல்லது 10 சீட்டுகளை கூட்டணியில் வாங்கி, மேஜையை தட்டுவதில் எந்த பயனும் இல்லை. ஒட்டுமொத்தமாக வென்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் அனைத்தும் தமிழர்களிடம் வரவேண்டும்.

தமிழ் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை என்ற நிலை உருவாகும். அரசு பள்ளிக்கூடங்களின் தரம் உயரும். அரசின் அனைத்து துறையினரின் குழந்தைகளும் அரசு பள்ளிக்கூடம், கல்லூரியில் படிக்க வேண்டும். அப்படி படிக்க வைக்காதவர்களின் சம்பளத்தில் பாதி துண்டிக்கப்படும். முதல்-அமைச்சர் முதல் அனைத்து அரசுத்துறையினரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். இல்லை என்றால் சம்பளம் பாதியாக துண்டிக்கப்படும்.நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது வரலாறு. மாற்றத்தை விரும்பும் மக்களின் பெருங்கனவுக்கான வெற்றி. இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

Tags

Next Story
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி..!