தேசிய நல்லாசியர் விருது: மொடக்குறிச்சி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தேர்வு
தேசிய அளவில் நல்லாசிரியர் விருது பெறும் தலைமை ஆசிரியை லலிதா.
ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை மேலும் சிறபிக்கும் வகையில் நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 5 ம் தேதி டெல்லி, விக்யான் பவனில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி முறையில் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதையடுத்து விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 44 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். அதில் குறிப்பாக , தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர். அதில் ஒருவர் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.லலிதா(44).
ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த தலைமை ஆசிரியை லலிதா, முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணியை தொடங்கினார். 19 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள இவர் கடந்த 2019 ஆண்டு வரை சிவகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணியாற்றினார். அதன் பிறகு பதவி உயர்வு பெற்று சத்தியமங்கலம் அருகே தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியாராக பொறுப்பேற்றார்.
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து தலைமை ஆசிரியர் டி.லலிதா கூறியதாவது, மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த கல்வியை, தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கற்றுக்கொடுக்கும் செயல்முறைகளை நான் பணியாற்றிய பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறேன். இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதாக கற்றுக்கொடுக்க முடியும். மேலும் தலைமைப் பண்பு குறித்து சர்வதேச அளவிலான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளேன்.
மாணவர்களிடையே இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, மாணவர்களுக்காக பாடங்கள் தொடர்பான 160 வீடியோக்களை யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளேன். இயற்கை சூழலில் வீடு ஒன்றை கட்டுவதற்கான மாதிரியை தயார் செய்து வைத்துள்ளேன். இதுபோல் பல்வேறு பணிகளை நான் எனது வாழ்நாளில் மாணவ மாணவியர்களுக்காக செய்து வருகிறேன். இந்நிலையில் தற்போது தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu