அந்தியூர் நியாய விலைக் கடையில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாச்சலம் இன்று காலை, அந்தியூர் அருகேயுள்ள புதுமாரியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நியாய விலைக் கடைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களை சந்தித்து, பொருட்கள் தரமாகவும், சரியான அளவிலும் வழங்கப்படுகிறதா என கேட்டார்.
மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி, அளவு சரியாக உள்ளதாக என அளந்து பார்த்தார். இதை தொடர்ந்து, நியாய விலைக்கடை ஊழியரிடம், அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் அளவு ஆகியவற்றை கேட்டறிந்து, இருப்பு புத்தகத்தை ஆய்வு செய்தார்.
பொதுமக்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர், நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து எந்தவித புகார் இருந்தாலும், தொலைபேசியிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு கூறலாம் என்றும், உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.அப்போது, மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நாகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu