சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 256வது பிறந்த நாள் விழா: மொடக்குறிச்சியில் அமைச்சர்கள் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் பிறந்த நாளையொட்டி, மொடக்குறிச்சி அருகே உள்ள வடுகப்பட்டி ஜெயராமபுரத்தில் பொல்லானின் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன் ஆகியோர் மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் பொல்லானின் 256வது பிறந்த நாளையொட்டி, மொடக்குறிச்சியில் பொல்லானின் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன் ஆகியோர் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத் தளபதியான மாவீரன் பொல்லானின் 256வது பிறந்தநாள் விழா, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம் வடுகபட்டி பேரூராட்சி ஜெயராமபுரத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று (டிச.28) சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மாவீரர் பொல்லானின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், இவ்விழாவில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் என்று அனைவராலும் போற்றப்படுகிற பொல்லானின் 256வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பாக, ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஜெயராமபுரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லானுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த டிசம்பர் 20ம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், ஜெயராமபுரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைத்திட அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
விரைவாக இந்த பணி துவங்க இருக்கிறது. அடுத்த ஓராண்டிற்குள்ளாக இந்த பணிகள் முடிவடையும். இது அரங்கமாக மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் அமையவுள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அரங்கம் அமைய இடத்தினை வழங்கியவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர் பழனிச்சாமி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, வடுகபட்டி பேரூராட்சி தலைவர் அம்பிகாவதி விஸ்வநாதன், மாவீரன் பொல்லான் வாரிசுதாரர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கலைமாமணி, மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சந்திரசேகர், சமூக நீதி கட்சி, பொல்லான் பேரவை நிறுவன தலைவர் வடிவேல் ராமன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu