மொடக்குறிச்சி அருகே பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்ட அமைச்சர் சு.முத்துசாமி!

மொடக்குறிச்சி அருகே பூந்துறை சேமூரில் பகுதிநேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் நடத்தும் முழு நேர ரேஷன் கடையான பூந்துறை சேமூர் ரேஷன் கடை 822 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த ரேஷன் கடையில் பொருட்களை பெற்று வந்த அம்பேத்கர்நகர் பகுதி மக்கள் பூந்துறை சேமூர் ரேஷன் கடையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அத்தியாவசிய பொருட்களை பெற்று வந்தனர்.
இப்பகுதி மக்கள் பயண தூரத்தை குறைத்து தங்கள் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் சுமார் 157 குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு பகுதி நேர ரேஷன் கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சு.முத்துசாமி பூந்துறை சேமூர் அம்பேத்கர் நகர் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும், மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, மொடக்குறிச்சி வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu