கூட்டுறவுத்துறை வங்கிகளில் பண பரிவர்த்தனை இலக்கு ரூ.1 லட்சம் கோடி: அமைச்சர் பெரியகருப்பன்!
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பெரியகருப்பன்.
கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கும் வங்கிகளில் வரவு, செலவு பண பரிவர்த்தனையை இந்தாண்டு ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த முதல்வர் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக ஈரோட்டில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்த்தில் உள்ள பெருந்துறை, ஈரோடு மஞ்சள், கொப்பரை தேங்காய் விற்பனைக்கான கூட்டுறவு சங்கங்களில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று (நவ.21) ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஈரோடு, திண்டல் மலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு மாவட்ட பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகம் உள்ளதால், தேங்காயாகவும், கொப்பரை தேங்காயாகவும் விற்பனை செய்து, பொருளாதார மேம்பாட்டில் பயன்படுத்துகின்றனர்.
கடந்த 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில், ஆண்டுக்கு சராசரியாக ரூ.6 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கடன் வழங்கினர். தற்போது, ரூ.12 ஆயிரம் கோடி ரூபாயை கடந்து கடன் வழங்கப்படுகிறது. இந்தாண்டு, ரூ.16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில், ரூ.589 கோடி ரூபாய் பயிர் கடனாகவும், கால்நடை பராமரிப்பு கழகம், ரூ.88 கோடி ரூபாய், நகை கடன், ரூ.921 கோடி, மகளிர் குழுவுக்கு, ரூ.76 கோடி ரூபாய் கடன் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கும் வங்கிகளில் வரவு, செலவு பண பரிவர்த்தனை கடந்தாண்டு ரூ.86 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இருந்ததை, 1 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த முதல்வர் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.
கூட்டுறவு கடன் சங்க செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை நேரடியாக அதன் கீழ் கொண்டு வர முயல்கிறோம். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில், 30 ஆண்டுக்கு மேலாக கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. மத்திய அரசு கூறும் சில விளக்கங்கள், நாம் ஏற்புடையதாக இல்லை. அதை சரி செய்ய கேட்டு வருகிறோம்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 3 கட்டமாக தேர்தல் நடந்தது நிர்வாகத்துக்கு இடையூறாக உள்ளது. அதனால் கூட்டுறவு சங்கத்தில் முழுமையாக அனைவர் பதவி காலமும் முடியவில்லை. அனைவர் பதவி காலமும் முடிந்தபின், முறையான உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும். முன்பு, போலி அங்கத்தினர் சேர்க்கை அதிகம் இருந்தது. 40 லட்சம் பேர் போலி உறுப்பினர்கள் என கண்டறிந்து நீக்கி உள்ளோம்.
நீக்கியவர்கள், உண்மையான உறுப்பினராக இருந்தால் அவர்களது ஆதார் அட்டையையும் இணைக்க கேட்டுள்ளோம். அதில், 60 சதவீதம் பேர்தான் இணைத்துள்ளனர். முழு உறுப்பினர் பட்டியல் தயாரித்த பின், தேர்தல் நடத்தப்படும். கூட்டுறவு வங்கிகளை ‘கோர் பாங்கிங்’ மூலம் இணைத்து, ஏடிஎம் கார்டு வழங்கி, எங்கும் பணம் எடுக்கலாம் என்பதற்கான திட்டப்பணி, 50 சதவீதத்துக்கு மேல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வங்கி சார்ந்த துறையில் போட்டிகள் உள்ளதால், கூட்டுறவு துறையை வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்கிறோம்.
மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள், கூட்டுறவு கடன் சங்கத்தில் கணக்கு வைத்து ஆர்டி போடுகின்றனர். அது அவர்களாகவே சேமிக்கின்றனர். நாங்கள் சேமிக்க கட்டாயப்படுத்தவில்லை. அவ்வாறாக கூட்டுறவு வங்கியில் 9 லட்சம் பேர் ஆர்டி துவங்கி உள்ளனர். எங்கும் நாங்கள் நிர்பந்திக்கவில்லை என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu