ஈரோட்டில் கலைஞரின் வெண்கல சிலை அமைக்கும் பணியை அமைச்சர் முத்துசாமி ஆய்வு
கோபி அருகே, கள்ளிப்பட்டியில் கலைஞர் படிப்பகத்துடன் கூடிய சிலை அமைக்கும் பணியை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவ சிலை மற்றும் படிப்பகம் (நூலகம்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர், ஆய்வின் போது டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது
கள்ளிப்பட்டியில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி மாலை கருணாநிதியின் 8-அடி உயர வெண்கல சிலையை முதலமைச்சர் நேரடியாக வந்து திறந்து வைக்க உள்ளார். அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.சிலையும் தயாராகி விட்ட நிலையில், இந்த சிலை அமைப்பதற்காக தனியாரிடம் விலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் 900 சதுர அடி பரப்பளவில் படிப்பகத்துடன் அமைக்கப்படுகிறது.இந்த படிப்பகத்தில் மாணவ-மாணவிகளின் அரசு போட்டி தேர்விற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வைக்கப்படும், ஒரே நேரத்தில் 20 பேர் அமர்ந்து படிப்பதற்கான வசதிகள் செய்யப்படும்.
அதே போன்று சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி பெற்று தான் சிலை அமைக்கப்படுகிறது, அதே போன்று படிப்பகமும் உரிய அனுமதியோடும், வழிகாட்டு நெறிமுறைப்படி தான் அமைக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி என்றார்.
மேலும் தமிழக முதலமைச்சர் சிலை திறப்பு விழா முடிந்த பின் அத்தாணி, அந்தியூர், பவானி வழியாக ஈரோடு செல்வதாகவும், அதைத்தொடர்ந்து 26-ஆம் தேதி காலை ஈரோட்டில் 70 ஆயிரம் பேருக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு முடிவுற்ற பணிகளையும் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளில் குடியிருப்பவர்களை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் விற்பனையாகாமால் உள்ள வீடுகளில் குடியமர்த்துவது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். அதே போன்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஏதாவது மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தர முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார், எங்கெங்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனரோ அதன் அருகிலேயே மாற்று இடம் வழங்கப்படும் என்றார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுத்து இருந்தால் இதற்குள் அனைத்து நெல் கொள்முதல் மையங்களுக்கும் மேற்கூரை அமைக்கப்பட்டு இருக்கும்.முதலமைச்சர் ஒவ்வொரு மாதமும் துறைவாரியாக ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதனடிப்படையில் விரைவில் விவசாயிகள் நலனுக்காக திட்டம் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் விற்பனையாகாமல் உள்ள வீடுகளின் மதிப்பு 12 லட்சம் ரூபாய் வரை ஆகிறது, இந்த வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் பயனாளிகள் செலுத்தினால் மீதமுள்ள தொகையை அரசு செலுத்துகிறது. வேறு ஏதாவது திட்டத்தை இதனுடன் செயல்படுத்த முடியுமா என்பதை ஆலோசனை செய்து தான் கூற முடியும் என்றும் இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தி.மு.க. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu