ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: 17ம் தேதி திமுக வேட்புமனு தாக்கல்
செய்தியாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்த போது எடுத்த படம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் ஈரோடு பெருந்துறை சாலையில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் இன்று (ஜன.12) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் ப.செல்வராஜ் தலைமையேற்றார். திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான சு.முத்துசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, சட்டமன்ற உறுப்பினராக சந்திரகுமார் வந்தால் அத்துனை தோழமை கட்சியினர், அமைப்புகளையும் அனுசரித்து அவர்களின் அத்துனை கருத்துகளையும் உள்வாங்கி அதற்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து இது போல் நாம் பயணிக்க வேண்டும். நம்முடைய இந்தியா கூட்டணியில் தான் ஒரே கட்சியில் எடுக்கும் முடிவுகளைப் போல அத்துனை தலைவர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே மனதோடு செயல்படுகிறார்கள்.
ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கு முழு முதற்காரணம் இங்கு வந்திருக்கும் அத்தனை பேரும் என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்த தேர்தலிலும் கடுமையாக உழைத்து மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.
நம்முடைய முதலமைச்சர் அன்றைக்கு இருந்ததைவிட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அந்த திட்டங்கள் அனைத்து மக்களையும், குறிப்பாக தாய்மார்களைச் சென்றடைந்திருக்கிறது. அது உண்மை என்று முதலமைச்சர் கடந்தமுறை இங்கே வந்த போது ஏறத்தாழ 36 கிமீ வழிநெடுகிலும் மக்கள் வரவேற்று நின்றார்கள். அவர்களைப் பார்த்து முதல்வர் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார்.
அதேபோல், நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கில் 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற வைத்திருக்கிறோம். மேற்கு மண்டலத்தில் 50 ஆயிரத்தைத் தொட்ட 4 தொகுதிகளில் ஈரோடு கிழக்கும் இருந்தது. அதைப்போல இந்த தேர்தலில் இரண்டு மடங்கு வித்தயாசமாவது கொண்டு வர வேண்டும்.
காரணம் தலைவர் வந்த போது 50 ஆயிரத்து 88 பேருக்கு ஒரே மேடையில் நலத்திட்ட உதவிகளைக் கொடுத்தார். வேறு எந்த அரசாங்கத்திலும் அப்படி செய்யவில்லை. அதுமட்டுமல்ல நமது தலைவர் நிறைவேற்றிய பல திட்டங்கள் வடமாநிலங்களில் பிஜேபி அரசாங்கத்தினர் எடுத்துச் செய்வதற்கு முயற்சிக்கின்றனர். அப்பொழுது ஸ்டாலின் திட்டம் என்று அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.
ஆகவே மக்கள் நம்முடைய கூட்டணியை நம்பி இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது என்று சொன்னால், வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
தேர்தலில் சட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாம் ஆளுங்கட்சியாக இருக்கிறோம். நம்முடைய தோழமை கட்சிகள் மிகுந்த பொறுப்புள்ள கட்சிகள். எனவே விதிமீறல் எதுவும் இல்லாமல் நடக்க வேண்டும்.
வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு நாம் செய்ததை நினைவு படுத்த வேண்டும். தாய்மார்கள் வாக்கு 99% நமது கூட்டணி பக்கம் இருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
யாரையும் நாம் எதிரியாக நினைத்து பேச வேண்டிய, திட்ட வேண்டிய அவசியமில்லை. நாம் என்ன செய்திருக்கிறோம், என்ன செய்யப் போகிறோம் என்பதை நடந்து சென்று வீடு வீடாக வாக்கு கேட்க வேண்டும். 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தோழமை கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து பேசினார்.
மேலும், திருமகன் ஈவேரா மற்றும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டு கொடுத்தனர். அதில் கொஞ்சம் செய்துள்ளோம். மீதமிருக்கிற பணிகளை கண்டிப்பாக செய்வோம். துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பிரச்சாரத்திற்கு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார். நிறைவாக திமுக வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் நன்றி கூறினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 17ம் தேதி பகல் 12 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றார். அதிமுக போட்டியிடவில்லை என்பதை விமர்சிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் பேசும்போது, எங்கள் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இங்கே போட்டியிடுவதாக எண்ணி மிகப்பெரிய வெற்றிக்கு அத்துனை பேரும் உறுதுணையாக இருக்க வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, செய்தியாளர்கயிடம் பேசிய சந்திரகுமார், இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறேன். இத்தேர்தலில் மிகப் பெரிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை, எந்த ஒரு அரசியல் இயக்கமும் பெறாத வெற்றியை இந்த இடைத்தேர்தலில் பெற இருக்கிறோம். திமுகவின் வெற்றி எழுதி வைக்கப்பட்ட வெற்றி. இந்த தேர்தலில் கதாநாயகனாக திமுக அரசின் கடந்த 4 ஆண்டு சாதனைகள் தான் மையப்புள்ளியாக இருக்கப் போகிறது.
குறிப்பாக மகளிருக்கான உரிமைத் தொகை, விடியல் பயணம், மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மக்களுக்கும் சென்றடைந்திருக்கிறது.
அந்த மக்கள் நல திட்டங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கப் போகிறது. அதுமட்டுமின்றி எங்கள் தலைவரின் பிரச்சார வியூகங்கள் மற்றும் இளந்தலைவரின் பிரச்சார உத்தி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும். நாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதுகிறோம். குறைந்தபட்சம் 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திமுக அமைப்பு இணை செயலாளர் அன்பகம் கலை, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தோழர் கே.துரைராஜ் மற்றும் கூட்டணி கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், செயல் வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் அனைத்துக் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu