ஈரோடு மாநகராட்சியில் ரூ.3.15 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்
ஈரோடு மாநகராட்சி, பெரியார் நகர் இ-பிளாக் குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்த போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு எம்பி பிரகாஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் முத்துசாமி இன்று (ஜன.2) பார்வையிட்டார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, நடைபெற்று வரும் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்டத்தில், குறிப்பாக, ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 44 பெரியார் நகர் இ-பிளாக் பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் 380 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய் பதித்தல் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வார்டு 27 கண்ணையன் வீதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கரீட் சாலை, வார்டு 40 பச்சையப்பா வீதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, வார்டு 16 பட்டேல் வீதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, வார்டு 7 அக்ரஹாரம் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை என ரூ.77.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கனி மார்க்கெட் பகுதியில் ரூ.12 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நிழற்குடையினையும், வார்டு 26 கள்ளுபிள்ளையார் கோவில் வீதியில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தினையும், வார்டு 24 ஆர்.கே.வி சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்கா என ரூ.1.29 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வார்டு 53 முனிசிபல் சந்திரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, அதேப் பகுதியில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, வார்டு 25 ராமசாமிநகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார மையத்தில் ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் சார்பில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய மேற்கூரையினை திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் மனிஷ்.என், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா, மாநகர பொறியாளர் விஜயகுமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் சுமதி, ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் தலைவர் சின்னசாமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu