ஈரோட்டில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் முத்துசாமி 110 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்!

சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் முத்துசாமி வழங்கிய போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை தங்கம் மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா இன்று (பிப்.24) நடைபெற்றது. இந்த விழாவினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார். பின்னர், 110 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அவர் வழங்கினார்.
அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்று வருகிறது. ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது.
இதனை, மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.
வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது என்ற தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் சுமார் 1,500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 110 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா துவக்கி வைக்கப்பட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசையாக தட்டு, பழம், வளையல், பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் 5 வகை உணவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஐ.பூங்கோதை, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu