சென்னிமலையில் 40 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

சென்னிமலையில் 40 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
X

சென்னிமலை பேரூராட்சி காமராஜர் மேடு சமுதாய கூடத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியாக இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் சாமிநாதன் வழங்கிய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சியில் 40 நபர்களுக்கு ரூ.3.69 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (ஜன.3) வழங்கினார்.

சென்னிமலை பேரூராட்சியில் 40 நபர்களுக்கு ரூ.3.69 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (ஜன.3) வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சி வார்டு 15க்கு உட்பட்ட மணிமலைகரடு பகுதியில் 40 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்து 789 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 15 காமராஜர் மேடு மணிமலைக்கரடு பகுதியைச் சேர்ந்த மக்களின் நீண்டநாள் கோரிக்கையான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கப்பட்டது. மேலும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் திறந்து வைக்கப்பட்டு, புதிய நீர்தேக்கத் தொட்டி அமைக்க பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் 22 கிராம ஊராட்சிகளில் உள்ள 434 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.482.36 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது சென்னிமலை பேரூராட்சியானது தன்னிறைவு பெற்ற பகுதியாக உள்ளது. மேலும் சென்னிமலை பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே உள்ள தொட்டிகள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை தார்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.


ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் உணவருந்தும் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் உள்ள பயணியர் நிழற்கூடை சுமார் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னிமலை பேரூராட்சியில் கடந்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 84 வளர்ச்சித் திட்டப்பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 10 அருணகிரிநாதர் தெருவில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினையும், வார்டு 1 கண்ணகி வீதியில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.


தொடர்ந்து, வார்டு 2 பட்டேல் வீதியில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்ல் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினையும், வார்டு 6,7 அறச்சலூர் சாலையில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினையும் திறந்து வைத்தார்.

இதனையடுத்து, வார்டு 12 முல்லை நகரில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினையும், வார்டு 13 காமராஜர் பள்ளி அருகில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினையும் என மொத்தம் ரூ.51.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற குடிநீர் திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

மேலும், வார்டு 8ல் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story