பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் இன்று (பிப்.21) ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டு, பயிற்சி பெறும் அரசு அலுவலர்களுடன் பயிற்சி குறித்து கலந்துரையாடினார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பயிற்சி நிலையமானது அரசு அலுவலர்களுக்கு 41 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
நவம்பர் மாதம் 1974-ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்பொழுது 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 198 அரசு துறைகளின் அலகுகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டு முதல் நாளது வரை சுமார் 1,53,184 அரசு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது 66-வது அணி பயிற்சி பெற்று வருகிறது. இதில் 937 அரசு பணியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இங்கு பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு 20 தங்கும் விடுதிகள், 12 வகுப்பறைகள், 80 கணினிகளுடன் இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட 1 கணினி ஆய்வகம், சுமார் 10,500 புத்தகங்களுடன் கூடிய ஒரு நூலகம், உள் விளையாட்டு அரங்கம், கலையரங்கம், பல்நோக்கு அரங்கம், நவீன உணவு கூடங்கள், சமையல் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இது தவிர அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மூலமாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியானது அரசு பணியாளர்கள் தங்களது பணியை மேலும் சிறப்பாக ஆற்றுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.
முன்னதாக, அங்குள்ள வகுப்பறைகள், கலையரங்கம், பல்நோக்கு அரங்கம், விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், உணவு கூடம், நூலகம், விடுதிகள் மற்றும் நவீன சமையலறை ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் ஆய்வகம் மற்றும் வகுப்பறைகளில் பயிற்சியில் இருந்த அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி, பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், வருவாய் அலுவலர் மற்றும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலைய முதல்வர் லதா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu