கள்ளிப்பட்டியில் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலை திறப்பு குறித்து அமைச்சர் ஆய்வு
கள்ளிப்பட்டியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.ஆனால் சிலை வைக்க அப்போதைய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் பீடம் அமைக்கப்பட்டதோடு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கலைஞர் சிலை வைக்க 3 ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை காரணமாக தற்போது அனுமதி கிடைத்தது.அதைத்தொடர்ந்து கள்ளிப்பட்டி பகுதியில் கலைஞர் சிலை அமைப்பதற்கான முன் ஏற்பாட்டு பணிகள் மற்றும் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நேற்று தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார், அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைப்பதற்காக டி.என்.பாளைய ஒன்றிய நிர்வாகிகள் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்,முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதே, சிலை வைப்பதற்காக நிர்வாகத்திடம் முழு அனுமதி பெற்ற பின்பே சிலை நிறுவ வேண்டும் என்று கூறிவிட்டார்.தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளதால் ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து ஈரோட்டில் வரும் 4-ஆம் தேதி காலை நலத்திட்ட உதவிகளையும், அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, நிறைவேறிய திட்டங்களை திறந்து வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.அடுத்த நாள் 5-ஆம் தேதி ஈரோட்டில் புத்தக திருவிழாவை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார், அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழா மட்டுமில்லை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
குருநாதசாமி கோயில் திருவிழா தேரோட்டத்தை பொருத்த வரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையுடன் கலந்து முடிவு செய்யப்படும்.இந்த ஆண்டு கீழ்பவானி பாசனத்திற்கு ஆகஸ்ட் 1 அல்லது 15-ஆம் தேதி தண்ணீர் திறப்பது குறித்து நாளை (இன்று) கோவையில் நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கீழ்பவானி பாசன விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார், அப்போது தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் எம்எல்ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், டி.என்.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் எம்.சிவபாலன், முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி, கோபி நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் உட்பட மாவட்ட, ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu